வட்டியும் முதலும், இது தொடராக விகடனில் வந்த போது படிக்க தவறி விட்டேன். பின்னர் சென்ற புத்தக கண்காட்சியில் இதை விகடனின் அரங்கில் வாங்கி வைத்தேன். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் படித்து முடித்தேன். படித்து முடித்த உடன் ராஜுமுருகனை பார்த்து பேச வேண்டும் போல் இருந்தது. ஏன் அடுத்ததாக எதையும் எழுதவில்லை இன்று வரையில் என்ற கேள்வி எழுந்தது, அடுத்த வாரமே ஆரம்பித்து விட்டார் விகடனில் gypsy என்றொரு தொடரை. இதையாவது வாரவாரம் படித்து விட வேண்டும்.
விகடனில் தொடராக வெளி வந்த போது படிக்காமல் பின்பு புத்தகமாய் வந்த உடன் படிப்பது எனக்கு புதிதல்ல. இதற்கு முன் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலக போரையும் புத்தகமாய் வாங்கித்தான் வாசித்து முடித்தேன். இந்த புத்தகத்தை இவளோ நாளாக படிக்காமல் விட்டு விட்டேனே என்று சிறு வருத்தம் இருந்தாலும் இப்போதாவது முடித்தேனே என்ற ஒரு த்ருப்தி.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாபிக் என்று 70 வாரங்கள் தொடர்ந்து வந்ததின் தொகுப்பு. இதை அப்பவே படித்து இருந்தால் 70 வாரமும் படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதுவரை தான் சென்ற இடங்கள், சந்தித்த மக்கள், பழகிய உறவுகள் நண்பர்கள் என அனைவரது நினைவுகளையும் திரும்பி பார்க்கிறார் ராஜுமுருகன். படிக்க படிக்க எனக்கு தோன்றியது எத்தனை மக்களை பார்த்து இருக்கிறார், எத்தனை அனுபவங்கள் இந்த மனிதனுக்கு கிடைத்து இருக்கிறது என்பது தான்.
இதை படித்தால் நமக்கும் சிறு வயது முதல் சந்தித்த, பார்த்த, ரசித்த, கேள்விப்பட்ட பல நபர்கள் நம் கண் முன் வந்து போவர்கள். பல மாமாக்களையும், அத்தைகளையும், அண்ணன்களையும், அக்காக்களையும் நினைவில் கொண்டு வந்து விடுகிறார். நான் சிறு வயதில் இருந்த வீட்டின் அருகே இருந்த 'கருப்பட்டி காபி' போட்டு கொடுக்கும் லட்சுமி அக்கா. நான் கோடை விடுமுறையில் என் தாத்தா வீட்டுக்கு சென்று ஆத்தில் குளித்த அனுபவங்கள். அங்கே பக்கத்து வீட்டில் தன்னுடைய தோற்று போன காதல் கதையை முழுதாய் சொன்ன அக்கா என்று பல(ர்) நினைவுகள் வந்து போனது. அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருகிறார்கள் என்று நினைக்க வைத்தது.
இந்த அவசர உலகத்தில் நாம் கவனிக்க தவறிய, கவனிக்க மறுத்த பல மனிதர்கள், நாம் மறந்து போன பல பழக்கங்கள் பற்றியும் பதிவு செய்து இருக்கிறார். இதை வாசித்த பின் சில மனிதர்களை இனி நாம் நிச்சயம் கவனிப்போம். இவரின் எழுத்து நடை மிகவும் கவர்ந்த ஒன்று. சலிப்பே தராமல் 500 பக்கங்களை கடக்க செய்தார்.
ஒரு ரயில் பயணத்தில் இந்த புத்தகத்தை படித்தும் முடிக்கும் போது இந்த வருடம் பிறந்தது, நேரம் சரியாக 12:02. நான் வாசித்த கடைசி அத்தியாயம், 'Life is beautiful'. தூங்க ஆரம்பித்த பொது 'side upper' சீட் வசதியாக இல்லையே என்ற கவலையில் இருந்தேன், 'lower berth கிடைக்குமா கை குழந்தையோட இருகாங்க நீங்க upper இல்ல middle berth எடுத்துகோங்க?' என்று ஒருவர் வந்தார். தாராளமாக என்று அவரின் upper berthஇல் நிம்மதியாக படுத்தேன், 'Life is beautiful' தான்.
பி.கு : எப்படியோ தமிழில் ஒரு பதிவை எழுது விட்டேன். சிறு வயதில் கடிதம் எழுதி பழகியது போல் இருந்தது.
பி.பி.கு : எழுத்து பிழைகளை மன்னிக்கவும்.
No comments:
Post a Comment